ஜூலை 24, 25ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ஜூலை 24, 25ம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற ஜூலை 24 மற்றும் 25ம் தேதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என கேரள மாநில அரசு அறிவித்து உள்ளது. அந்த நாட்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா பரவல் 2வது அலையால் இந்தியாவில் அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை தடுப்பதற்காக மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இருப்பினும் டெல்டா பிளஸ் வைரஸ், கொரோனா 3வது அலை அச்சம் ஆகியவற்றின் காரணமாக வார இறுதி, இரவு நேர பொதுமுடக்கத்தை சில மாநிலங்கள் தொடர்ந்து அமலில் வைத்துள்ளன. மேலும் அரசு வழங்கியுள்ள தளர்வுகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீறுவது உறுதி செய்யப்பட்டால் அவை திரும்ப பெறப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஜூலை 24, 25 (சனி மற்றும் ஞாயிறு) அரசு முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் சராசரி சோதனை நேர்மறை விகிதம் இன்னும் 10 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது வார இறுதி முழு ஊரடங்கு குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.